பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது - மிட்செல் மார்ஷ்

Image Courtesy: @IPL / @LucknowIPL
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினார்.
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 235 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 57 ரன் எடுத்தார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது மிட்செல் மார்ஷ்க்கு வழங்கப்பட்டது. இதையடுத்து மிட்செல் மார்ஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஐ.பி.எல் தொடரின் இடையில், நான் சில வருடங்கள் விளையாடவில்லை. தற்போது ஒரு வழியாக சதத்தை அடித்துள்ளேன். முதல் முறையாக நான் 2010-ம் ஆண்டு டெக்கான் அணிக்காக விளையாடினேன். இது ஒரு நீண்ட பயணம். லக்னோ அணியில் தொடக்க வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
மார்க்ரமுடன் களத்திலும், களத்திற்கு வெளியேயும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளேன். ஐ.பி.எல் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் விளையாட வந்தேன். குஜராத் அணி பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்தனர். பவர் பிளே ஓவரில் நீங்கள் 12 பந்தில் 12 ரன்கள் எடுத்தால் பதற்றமான சூழல் ஏற்படும். அப்போது சில நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களுடைய விஷயங்களை எளிதாக மாற்றியது.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஐ.பி.எல் தொடர் நல்ல போட்டி மிகுந்தது. அதில் சில போட்டிகளில் வெற்றியை நெருங்கி சென்றும் தவற விட்டதால் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினோம். ஐ.பி.எல் தொடரில் எந்த அணியும் தங்களுடைய நாளில் எந்த அணியையும் தோற்கடிக்கும். அதனாலேயே ஐ.பி.எல் உலகின் சிறந்த போட்டியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.