முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கர்நாடகாவிடம் தமிழக அணி தோல்வி

முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தமிழக அணி 145 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோல்வி அடைந்தது.
ஆமதாபாத்,
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான தமிழக அணி, கர்நாடகாவை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணியின் கேப்டன் வருண் சக்ரவர்த்தி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 245 ரன்கள் சேர்த்து மலைக்க வைத்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 24 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் சரத் 53 ரன்னிலும், கருண் நாயர் 4 ரன்னிலும் ‘அவுட்’ ஆனார்கள். 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது 4-வது சதத்தை பதிவு செய்த தேவ்தத் படிக்கல் 102 ரன்களுடனும், ரவிச்சந்திரன் சமரன் 46 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் 7 பவுலர்களை பயன்படுத்தியும் கர்நாடகாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
பின்னர் ஆடிய தமிழக அணி 14.2 ஓவர்களில் 100 ரன்னில் சுருண்டது. இதனால் கர்நாடக அணி 145 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துஷர் ரஹேஜா 29 ரன்னும், ஜெகதீசன் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். கர்நாடகா தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால், பிரவீன் துபே தலா 3 விக்கெட்டும், விஜய்குமார் வைஷாக், ஷூபாங் ஹெஜ்டே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
4-வது ஆட்டத்தில் ஆடிய கர்நாடகா பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். தமிழக அணிக்கு விழுந்த 3-வது அடியாகும். அத்துடன் தனது பிரிவில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது.
இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் கோவா 7 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. கோவா அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் தெண்டுல்கர் 3 விக்கெட் வீழ்த்தினார்.






