புதிய மைல்கல்லை எட்டிய மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்


புதிய மைல்கல்லை எட்டிய மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்
x

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டில் நடந்த முதல் 3 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வரிசையாக வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை தக்கவைத்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் இந்த போட்டி தொடங்கியது.

இந்த போட்டிக்காக டாஸ் போடப்பட்டது. அப்போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா , இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது . அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்கம் முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் தடுமாறினர். ஆஸ்திரேலிய அணியின் மிரட்டல் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் மட்டும் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் நெசர் 4 விக்கெட், போலந்த் 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 42 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியை முதல் நாளில் 93,442 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளனர். இது மெல்போர்னில் அதிக ரசிகர்கள் கண்டுகளித்த போட்டி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

மெல்போர்னில் 2015 ஆஸ்திரேலியா - நியூசிலாந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியை 93,013 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததே இதுவரை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story