லார்ட்ஸ் டெஸ்ட்: 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை ஏன் கொண்டாடவில்லை? பும்ரா பதில்


லார்ட்ஸ் டெஸ்ட்: 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை ஏன் கொண்டாடவில்லை? பும்ரா பதில்
x

image courtesy:PTI

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கருண் நாயர் 40 ரன்னிலும் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்கள். முந்தைய டெஸ்டின் ஹீரோவான கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். பொறுமையாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தார்.

2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் (33 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, அதனை கொண்டாடாமல் அடுத்த பந்தை வீச சென்று விட்டார். அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது கவுரமான ஒன்றாக கருதப்படும் வேளையில் பும்ரா அதனை கொண்டாடாதது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியது.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் முடிந்ததும் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பும்ராவிடம், 5 விக்கெட்டுகள் வீழ்த்தி விட்டு நீங்கள் ஏன் கொண்டாடவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பும்ரா, "உண்மை என்னவென்றால், நான் சோர்வாக இருந்தேன். எனவே என்னால் கொண்டாட முடியவில்லை. நான் நீண்ட நேரம் பந்து வீசினேன். சில சமயங்களில் நான் சோர்வடைந்து விடுவேன். மேலும் நான் இப்போது குதித்து விளையாடும் அளவுக்கு 21-22 வயது இளம் வீரர் இல்லை. நான் விக்கெட் வீழ்த்தி அணிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்து எப்போதும் போல் அடுத்த பந்தை வீச தயாராகி விட்டேன்" என்று கூறினார்.

1 More update

Next Story