ஐ.பி.எல். 2025: தாயகம் திரும்பிய ரபாடா

தனிப்பட்ட காரணங்களுக்காக ரபாடா சொந்த நாடு திரும்பியதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை,
ஐ.பி.எல். போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பி உள்ளதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர் எப்போது இந்தியா திரும்பி மீண்டும் அணியில் இணைவார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் ரபாடா விளையாடினார். பஞ்சாப் அணிக்கு எதிராக 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மும்பைக்கு எதிராக 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த சூழலில் குஜராத் அணி நேற்று இரவு நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியிலும் ரபாடா விளையாடவில்லை. ரபாடாவுக்குப் பதிலாக அர்ஷத் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட அர்ஷத் கான், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ரபாடாவுக்குப் பதிலாக மற்றொரு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி அல்லது ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் கரிம் ஜன்னத்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
குஜராத் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது, அவர்களின் முதல் மூன்று போட்டிகளில், இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன். அவர்களின் அடுத்த போட்டி ஏப்ரல் 6ம் தேதி அன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான போட்டியாகும், அதன் பிறகு அவர்கள் ஏப்ரல் 9ம் தேதி ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறார்கள்.