மேத்யூ ஹெய்டனின் மானத்தை காப்பாற்றிய ஜோ ரூட்

ஆஷஸ் டெஸ்டில் ஜோ ரூட் சதமடிக்கவில்லை என்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் ஹெய்டன் சவால் விட்டிருந்தார்.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்துள்ளது. ரூட் 135 ரன்களுடனும், ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த சதம் அவரது 40-வது டெஸ்ட் சதமாக பதிவானது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதமாக இது பதிவாகியுள்ளது.
இந்த போட்டிக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். இதற்கு முன்பு 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்திருந்தார். ஆனால் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த தொடருக்கு முன்பாக இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் சவால் விட்டிருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் சதமடித்து ஹெய்டனின் மானத்தை ஜோ ரூட் காப்பாற்றி உள்ளார்.






