மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட போகிறாரா விராட் கோலி..? அவரே சொன்ன பதில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ராஞ்சி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் அபார சதத்தின் (135 ரன்கள்) உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்தது.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவரில் 332 ரன் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்த போட்டி யில் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
விராட் கோலி சர்வதேச டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடி வருகிறார். இதனிடையே இந்திய டெஸ்ட் அணி சமீபகாலமாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் அனுபவம் வாய்ந்த விராட் கோலியை டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்க பி.சி.சி.ஐ. பரிசீலிப்பதாக ஊகங்கள் கிளம்பின.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்றைய போட்டியின் முடிவில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலியிடம், ‘நீங்கள் தொடர்ந்து ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடப் போகிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விராட் கோலி, “ஆம், அது எப்போதும் அப்படித்தான் இருக்கும். நான் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறேன்” என்று கூறினார்.
இதன் மூலம், அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.






