ஐ.பி.எல்.: வித்தியாசமான சாதனை பட்டியலில் இணைந்த ஷேக் ரசீத் - ஆயுஷ் மாத்ரே ஜோடி

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர்களான ஷேக் ரசீத் (வயது 20) மற்றும் ஆயுஷ் மாத்ரே (வயது 17) களமிறங்கினர். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியில் 21 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவது இது 4-வது நிகழ்வாகும். அந்த வகையில் இந்த வித்தியாசமான சாதனை பட்டியலில் 4-வது ஜோடியாக இவர்கள் இணைந்துள்ளனர்.
அந்த பட்டியல்:-
1. சஞ்சு சாம்சன் - ரிஷப் பண்ட்
2. சுப்மன் கில் - டாம் பாண்டன்
3. அபிஷேக் சர்மா - பிரியம் கார்க்
4. ஷேக் ரசீத் - ஆயுஷ் மாத்ரே