ஐ.பி.எல்.: ஆர்சிபி-ஐ தொடர்ந்து விற்பனைக்கு வரும் மற்றொரு அணி..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட உள்ளதாக ஏர்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியை விற்பனை செய்ய இருப்பதை அதன் உரிமையாளரான டியாஜியோ நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் பெங்களூரு அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
இது தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதர ரான ஹர்ஷா கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில், “ ஒன்றல்ல, இரண்டு ஐபிஎல் அணிகள் இப்போது விற்பனைக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். ஒன்று ஆர்சிபி. மற்றொன்று ராஜஸ்தான் ராயல்ஸ். இன்றைய உயர்ந்த மதிப்பீடுகளைப் பயன்படுத்தி கொள்ள அனைவரும் விரும்புவது தெளிவாக தெரிகிறது. ஆகவே, இரண்டு அணிகள் விற்பனைக்கு, ஆனால் 4/5 பேர் வாங்கத் தயாராக உள்ளனர்! இறுதியில் வெற்றிகரமான வாங்குபவர்கள் யார் - அது புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு அல்லது அமெரிக்காவை சேர்ந்தவராக இருப்பார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரபூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






