ஐபிஎல்: சாதனை படைத்த முகமது ஷமி

ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
சென்னை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின . இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. டெவால்டு பிரெவிஸ், 25 பந்துகளில்(1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) 42 ரன்கள் குவித்தார்.ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது.தொடக்கத்தில் அபிஷேக் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் . பின்னர் டிராவிஸ் ஹெட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து ஹென்ரிச் கிளாசன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார் . பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். அவர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார் .தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடினார். இறுதியில் 18..4 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் 155 ரன்கள் எடுத்தது . இதனால் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்னிங்சின் முதல் பந்தில் ஷேக் ரஷீத் (சென்னை) விக்கெட்டை வீழ்த்தினார். அவர் ஐ.பி.எல். தொடரில் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்துவது இது 4-வது முறையாகும். இதன் மூலம் முதல் பந்தில் அதிக முறை விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.