ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை
x

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது.

மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 116 ரன்னில் சுருண்டது. ஒட்டுமொத்த பேட்டிங்கும் சொதப்பியது. அதிரடி ஆட்டக்காரரான வெங்கடேஷ் அய்யர், சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங் ஆகியோரின் தடுமாற்றமான பேட்டிங் பின்னடைவாக அமைந்தது. இதேபோல் பந்து வீச்சில் ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணாவின் வேகப்பந்து வீச்சு நிலையற்றதாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா முதுகு வலி பிரச்சினையில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

கொல்கத்தா அணியின் முக்கிய ஆயுதமாக சுழற்பந்து வீச்சு பார்க்கப்படுகிறது. சுழலுக்கு சாதகமான ஈடன் கார்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி சுழற்பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. உள்ளூர் அணிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்படாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் ஆட்டங்களில் சுழலுக்கு சாதகமாக ஆடுகளம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சூழ்நிலையை பயன்படுத்தி கொல்கத்தா அணி எழுச்சி பெற முயற்சிக்கும்.

ஐதராபாத் அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்ததுடன் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் முறையே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியிடமும் தோல்வியை தழுவியது. அந்த இரு ஆட்டங்களிலும் 190, 163 ரன்களே எடுத்தது. அந்த அணியின் பலமான அதிரடி பேட்டிங் சரியாக 'கிளிக்' ஆகாதது கடந்த 2 ஆட்டங்களிலும் தோல்விக்கு வழிவகுத்தது. இதனால் அவர்கள் தங்களது வியூகத்தை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, ஹென்ரிக் கிளாசென் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. பந்து வீச்சில் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல், ஜீஷன் அன்சாரி வலுசேர்க்கிறார்கள்.

கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி கொல்கத்தாவிடம் தோற்று கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இது நல்ல வாய்ப்பாகும். இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் கொல்கத்தாவும், 9-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story