ஐ.பி.எல். 2026: சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இவர்கள்தான் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு


ஐ.பி.எல். 2026: சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இவர்கள்தான் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
x

image courtesy:twitter/@ChennaiIPL

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் மினி ஏலம் நடைபெற உள்ளது.

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டோனி, டிவால்ட் பிரேவிஸ், ஊர்வில் பட்டேல், ஷிவம் துபே, ஜாமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் முகமது, கலீல் அகமது, அன்ஜூல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எலிஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக பரிமாற்றம் (டிரேடிங்) மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (ரூ.14 கோடி), சாம் கர்ரன் (ரூ.2.4 கோடி) ஆகியோரை விட்டுக்கொடுத்துள்ளது.

கடந்த சீசனில் சென்னை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் 10-வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக அடுத்த சீசனில் (2026) அந்த அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசனில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் சேர்க்கப்பட்டார். அந்த வாய்ப்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக ஆடிய அவரை அடுத்த சீசனுக்காக சென்னை அணி மீண்டும் தக்கவைத்துள்ளது.

அந்த சூழலில் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த சீசனில் விளையாட உள்ளார். அதுபோக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சனும் தொடக்க ஆட்டக்காரர். எனவே அடுத்த சீசனில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கப்போவது யார் - யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

அவரது கணிப்பின் படி, கெய்க்வாட் மற்றும் ஆயுஷ் மாத்ரே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என்று கூறியுள்ளார். அத்துடன் சஞ்சு சாம்சன் 3-வது வரிசையில் பேட்டிங் செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story