இந்தியாவின் சூப்பர்மேன்கள் - சச்சின் பாராட்டு

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் (111ரன்கள்), ஜோ ரூட் (105 ரன்கள்) சதமடித்தனர் இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
இதில் இங்கிலாந்தின் வெற்றிக்கு மேற்கொண்டு 35 ரன் தேவை, இந்தியா மகுடம் சூடுவதற்கு எஞ்சிய 4 விக்கெட்டுகளை சூறையாட வேண்டும் என்ற பரபரப்பான நிலைமையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று அரங்கேறியது. இந்த சூழலில் முகமது சிராஜ் அற்புதமாக பந்துவீசி இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின், இந்திய அணி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அதில் சச்சின், "டெஸ்ட் கிரிக்கெட்... முழுக்க முழுக்க புல்லரிப்பு! தொடர் 2-2, செயல்பாடு 10/10! இந்தியாவின் சூப்பர்மேன்கள்! என்ன ஒரு வெற்றி! " என்று பாராட்டியுள்ளார்.