பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா.. மறைமுகமாக வாய்ப்பு கேட்ட கருண் நாயர்.. அஸ்வின் கொடுத்த ரியாக்சன்


பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா.. மறைமுகமாக வாய்ப்பு கேட்ட கருண் நாயர்.. அஸ்வின் கொடுத்த ரியாக்சன்
x
தினத்தந்தி 24 Nov 2025 8:15 PM IST (Updated: 24 Nov 2025 9:02 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ - ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. மார்க்ரம் 12 ரன்களுடனும், ரிக்கல்டன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர். இந்த போட்டியில் பாலோ ஆனை கூட தவிர்க்க முடியாத இந்திய அணி முதல் போட்டியில் 124 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2016-ல் மட்டுமே சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் கொடுத்தும் இந்தியா வென்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இந்தியா கருண் நாயரின் 303 ரன்கள் உதவியுடன் 759/7 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்தை 207க்கு சுருட்டிய இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த 2-வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற கருண் நாயரை போன்று ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் அற்புதம் நிகழ்த்த வேண்டிய நிலை வந்தாலும் வரலாம். ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணி தற்போது 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி இப்படி தடுமாறும் வேளையில் கருண் நாயர் தமக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ சில சூழ்நிலைகளை பார்க்கும்போது நம் மனதிற்கு நெருக்கமாக உணருவோம். ஆனால் நாம் அங்கே இல்லை என்ற அந்த மவுனம், ஒரு விதமான வலியைத் தருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த இந்திய முன்னாள் வீரரான அஸ்வின் ‘அடேய்’ என்று சிரித்துக் கொண்டே ஒற்றை வார்த்தையில் கருண் நாயரின் பதிவுக்கு ரியாக்சன் கொடுத்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story