அந்த உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்.. - அபிஷேக் சர்மா

image courtesy:PTI
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் தொடர் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கான்பெர்ராவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், கோல்டுகோஸ்டில் நடந்த 4-வது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன் எடுத்திருந்த போது இடி மற்றும் மின்னல் காரணமாக ஆட்டம்நிறுத்தப்பட்டது. அப்போது அபிஷேக் ஷர்மா 23 ரன்களுடனும் (13 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), சுப்மன் கில் 29 ரன்களுடனும் (16 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இடி, மின்னலை அடுத்து சற்று நேரத்தில் மழையும் பலமாக கொட்டியது. மழை தொடர்ந்து பெய்ததால் 2¼ மணி நேர பாதிப்புக்கு பிறகு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தமக்கு கிடைத்தால் கனவு நிஜமாகும் என்று அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இந்தப் போட்டிக்காக நான் காத்திருந்தேன். நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்று டி20 போட்டிகளில் விளையாடப் போகிறோம் என்பதை அறிந்ததும், நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஆஸ்திரேலியா பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமானது என்பதை எனது வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கிறேன். ஹேசில்வுட் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது.
பேட்டர்களுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான போட்டியை நான் எப்போதும் ரசிக்கிறேன் என்று முன்பே கூறியுள்ளேன். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். நீங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவும் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படவும் விரும்பினால், நீங்கள் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்காகவே நான் பயிற்சி செய்து வந்தேன்.
ஏனெனில் அப்போதுதான் நீங்கள் உங்கள் அணிக்காக சிறப்பாக விளையாட முடியும். எங்கள் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் சிறப்பு நன்றி. அவர்கள் எனது விளையாட்டை வெளிப்படுத்தும் பொறுப்பை அளித்துள்ளனர். அணிக்காக தொடக்கத்தில் ரன் வேகத்தை அமைக்க வேண்டும் என்ற தெளிவை அவர்கள் எனக்குத் தந்துள்ளனர். அதற்காகவே நான் பயிற்சி செய்து வந்தேன்.
டி20 உலகக்கோப்பை மிகப்பெரிய தொடர். ஒருவேளை அதில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அது கனவு நிஜமான தருணமாக இருக்கும். குழந்தையாக இருக்கும்போதே இதைப் பற்றி கனவு கண்டேன். உலகக் கோப்பையை வெல்வது மற்றும் என் நாட்டிற்காக போட்டிகளில் வெற்றி பெறுவது. அதற்காக நான் முழுமையாக தயாராக இருப்பேன்” என்று கூறினார்.






