நான் தோனி போல ஆக நினைத்தேன் - பாக்.கேப்டன் பேட்டி

image courtesy:PTI
மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
மும்பை,
13-வது மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி பாத்திமா சனா தலைமையில் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் தான் கேப்டன் பதவியை ஏற்றபோது, தோனியைப் போல ஆக வேண்டும் என்று நினைத்தாக பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் கேப்டனாக இருக்கும்போது ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருப்பது இயல்பு. ஆனால் நான் மகேந்திர சிங் தோனியிடமிருந்து ஒரு கேப்டனாக உத்வேகம் பெறுகிறேன். இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் கேப்டனாக அவரது ஆட்டங்களைப் பார்த்திருக்கிறேன்.
களத்தில் அவர் எடுக்கும் முடிவுகள், அமைதியான அணுகுமுறை மற்றும் தனது வீரர்களை ஆதரிக்கும் விதம் இவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். நான் கேப்டன் பொறுப்பை ஏற்றபோது, தோனியைப் போல ஆக வேண்டும் என்று நினைத்தேன். அவரது பேட்டிகளையும் பார்த்தேன், அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர். அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.