இந்திய அணியின் தற்போதைய கபில்தேவ் இவர்தான் - சேத்தன் சர்மா பாராட்டு

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
மும்பை,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக கே.எல்.ராகுல், ஜடேஜா உள்ளிட்ட சில வீரர்களை இந்திய முன்னாள் வீரர் சேத்தன் சர்மா பாராட்டி சில கருத்துகளை கூறினார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கிலாந்து மண்ணில் எப்போது பந்து அதிகளவில் ஸ்விங்காகும் அதனால்தான் போட்டியின் கடைசி நாளில் (5-வது நாள்) கூட பந்து ஸ்விங்காவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் பலவீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக கே.எல் ராகுல், சுப்மன் கில், ஜடேஜா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இங்குள்ள சூழலை சரியாக கணித்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். கே.எல் ராகுல் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார். ஏனெனில் தொடக்க வீரராக களமிறங்கும் அவர் 40, 50 ரன்கள் அடித்தால் கூட நிலையாக நின்று நல்ல அடித்தளத்தை அமைக்கிறார். அதன் காரணமாக மிடில் ஆர்டரில் வரும் வீரர்களுக்கு அழுத்தம் குறைகிறது.
ஜடேஜா எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு உண்மையிலேயே தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்னை பொருத்தவரை ஒரு முழுமையான வீரர் என்றால் அது ஜடேஜாதான் அவரால் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறையிலும் 100 சதவீதம் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். அவர் பல வழிகளில் எனக்கு கபில் தேவை நினைவூட்டுகிறார். தற்போதைய இந்திய அணியின் கபில் தேவ் என்றால் நான் ஜடேஜாவைத்தான் கூறுவேன். அதன் காரணமாகவே அவர் உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக இருக்கிறார்" என்று கூறினார்.