ஜடேஜா கேட்ச்சை தவறவிட்ட ஹர்ஷல்... மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்திய காவ்யா மாறன்

Image Courtesy: X (File Image)
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 30 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஐதராபாத் அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக இந்த ஆட்டத்தில் ஜீஷன் அன்சாரி வீசிய 7வது ஓவரில் ஜடேஜா லாங் ஆப் திசையில் தூக்கி அடிக்க, சரியாக ஹர்ஷல் படேல் அந்த திசையில் பீல்டிங் நின்றிருந்தார்.
இதனால் ஒட்டுமொத்த மைதானமும் ஹர்ஷல் கேட்சை பிடித்துவிடுவார் என நம்பியது. அதேபோல் காவ்யா மாறனும் உற்சாகத்தில் துள்ளி குதித்தார். ஆனால், ஹர்ஷல் படேல் அந்த கேட்சை கோட்டைவிட்டார். அப்போது துள்ளிக் குதித்து கொண்டிருந்த காவ்யா மாறன், உடனடியாக கத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஐதராபாத் அணியின் உரிமையாளர் மைதானத்திலேயே கோபத்தில் கத்தியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.