மைதானத்துக்கு வந்த கம்பீர்.. ரசிகர்கள் செய்த செயல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை


மைதானத்துக்கு வந்த கம்பீர்.. ரசிகர்கள் செய்த செயல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் இழந்தது.

கவுகாத்தி,

இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் மேலும் ஒரு பேரிடி விழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆனது.

கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களது மிகப்பெரிய மோசமான சாதனை தோல்வியை சந்தித்தது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்துள்ளது.

தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்த தேவையற்ற மாற்றங்களும், தவறான தேர்வுகளும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து கவுதம் கம்பீர் விலக வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியின் முடிவில் கவுகாத்தி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோல்வியால் விரக்தியில் இருந்தனர். இந்த தோல்விக்கு கம்பீர்தான் காரணம் என்று கருதிய ரசிகர்கள் அவர் மைதானத்துக்கு வந்ததும் அவருக்கு எதிராக ஆக்ரோசமாக முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்கு கம்பீர் எந்த ரியாசனும் கொடுக்கவில்லை. இருப்பினும் இந்திய வீரர் முகமது சிராஜ் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் ரசிகர்கள் அருகே சென்று அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இருப்பினும் ரசிகர்கள் ஓயவில்லை. தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதனால் இந்திய அணி நிர்வாகிகள் மைதானத்தில் இருந்த போலீசாரிடம் புகார் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட போலீசார் முழக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்த நபரை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

1 More update

Next Story