அடிக்கடி மாற்றப்பட்ட பந்து: இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது - இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்

image courtesy:PTI
நேற்றைய ஆட்டத்தின்போது பந்தை மாற்றக்கோரி இந்திய கேப்டன் சுப்மன் கில் அடிக்கடி நடுவரிடம் முறையிட்டார்.
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கருண் நாயர் 40 ரன்னிலும் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்கள். முந்தைய டெஸ்டின் ஹீரோவான கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். பொறுமையாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தார்.
2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் (33 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
இந்த தொடருக்கு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து அதன் வடிவமைப்பை சீக்கிரம் இழந்து விடுகிறது. நேற்றைய ஆட்டத்தில் 80-வது ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட போதிலும் அதன் தன்மையும் விரைவாக மாறியது. இதனால் பந்தை மாற்றக்கோரி இந்திய கேப்டன் சுப்மன் கில் அடிக்கடி நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து 90.4-வது ஓவரிலும், 98.4-வது ஓவரிலும் பந்து இரண்டு முறை மாற்றப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார். அனைத்தும் சாதகமாக சென்று கொண்டிருந்த நிலையில் பந்தை மாற்றுமாறு இந்தியா கேட்டதாலேயே நடுவர்கள் மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியா மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. ஏன் பந்தை மாற்ற வேண்டும்? பும்ரா ஸ்விங் செய்து அசத்திக் கொண்டிருந்தார். அவரிடம் பந்தை கொடுத்து மாற்றலாமா? என்று சிராஜ் கேட்க கூட இல்லை. அவருடைய கருத்தையும் கேட்கவில்லை. அந்த பந்து இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது. அப்படியிருந்தும் ஏன் அவர்கள் அதை மாற்றினார்கள்? என்ற ஐடியா என்னிடம் இல்லை. இருப்பினும் கொடுக்கப்பட்ட பந்து மாற்றப்பட்ட பந்தை விட மிகவும் பழையதாக இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதனால் இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது" என்று கூறினார்.