முன்னாள் கிரிக்கெட் வீரர் புஜாராவின் உறவினர் மர்ம மரணம்

ஓராண்டுக்கு பின்னர் சரியாக நவம்பர் 26-ந்தேதியான நேற்று பாபரி உயிரிழந்து இருக்கிறார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா. இவருடைய மனைவி பூஜா பாபரி. இந்நிலையில், பூஜாவின் சகோதரரான ஜீத் பாபரி (வயது 30) வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள ஹரிஹரன் சொசைட்டி பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் பாபரி கிடந்துள்ளார்.
இதுபற்றிய தகவல் அறிந்து அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பாபரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் கூறியுள்ளனர். ஆனால், தற்கொலைக்கான நோக்கம் என்னவென தெரிய வரவில்லை. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாபரிக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை போலீசில் பதிவு செய்து இருக்கிறார். திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்து விட்டு, பாலியல் உறவில் ஈடுபட்டார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், பாபரி அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார். சரியாக ஓராண்டுக்கு பின்னர் நவம்பர் 26-ந்தேதியான நேற்று பாபரி உயிரிழந்து இருக்கிறார். எனினும், இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.






