முதல் டெஸ்ட்: தோல்விக்கான காரணம் என்ன..? கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 159 ரன்களும், இந்தியா 189 ரன்களும் அடித்தன. பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 93 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக பாதியில் விலகினார். இதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து பேசிய இந்திய கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில், “இப்படிப்பட்ட ஒரு போட்டி குறித்து, நாம் அதிகமாக ஆழ்ந்து யோசிக்கக் கூடாது. இந்த ஸ்கோரை நாம் துரத்தியிருக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்கள் மீது அழுத்தம் அதிகரித்தது. பவுமா மற்றும் போஷ் ஆகியோர் அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதன்மூலம் அவர்கள் (தென் ஆப்பிரிக்க அணி) ஆட்டத்திற்கு திரும்பி வந்தனர். பிட்ச்சில் அவர்களுக்கு உதவி இருந்தது. 120 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் சற்று சவாலான இலக்குதான். ஆனால் ஒரு அணியாக நாங்கள் அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் தோல்வியடைந்து விட்டோம். நாங்கள் வலுவாக திரும்பி வருவோம்” என்று கூறினார்.






