முதல் ஒருநாள் போட்டி: வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் கூறியது என்ன..?

image courtesy:BCCI
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ராஞ்சி,
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அரங்கேறியது. இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர்.
அடுத்து 350 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 72 ரன்களும், மார்கோ ஜான்சன் 70 ரன்களும், கார்பின் போஷ் 67 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், “ நான் நீண்டகாலம் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றேன் என்பது தெளிவாகிறது. நாங்கள் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்தோம் என்று நினைக்கிறேன். எங்கள் திட்டங்களில் நாங்கள் மிகவும் தெளிவாகவும் முழுமையாகவும் இருந்தோம், பந்து வீச்சாளர்கள் அதைக் கடைப்பிடிப்பதை பார்ப்பது நல்லது. அவர்கள் (தென் ஆப்பிரிக்கா) எங்களை கடினமாக விளையாடுவதற்காக தொடர்ந்து தள்ளினார்கள். அவர்கள் வெற்றிக்காக தொடர்ந்து கடுமையாக போராடினர். அதனால் ஆட்டம் உற்சாகமாக இருந்தது.
நான் 6-வது இடத்தில் பேட்டிங் செய்வது பரவாயில்லை. அணிக்காக வேலையைச் செய்கிறேன். நான் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். இந்த வேலைதான் கடந்த 2 - 3 தொடர்களாகவே எனக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நல்லது என்று நினைக்கிறேன். அதனால் நான் விளையாட்டைப் பற்றியும், நான் எப்படி சிறப்பாக மாற முடியும் என்பதைப் பற்றியும் தொடர்ந்து சிந்திக்கிறேன்
விராட், ரோகித் ஆகியோர் விளையாடுவதைப் பார்ப்பது எப்போதும் வேடிக்கையாக இருக்கும். அவர்கள் தங்களை யார் என்பதையும் காண்பித்தனர். அதைத்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் செய்து, எதிரணிகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள். நான் இதை நீண்ட காலமாகப் பார்த்து வருகிறேன். அவர்கள் இருக்கும்போது எங்களுடைய அணியில் நிறைய வேடிக்கை இருக்கும். நான் அவர்களுடன் என் முழு கிரிக்கெட்டையும் விளையாடியுள்ளேன். எனவே அவர்களுடன் அரட்டை அடிப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது எனக்கும் மைதானத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஹர்ஷித் நன்றாக விளையாடினார். அவர்களுடைய திறமை எங்களுக்குத் தெரியும். உயரமான அவர் வேகமாக பந்து வீசி பேட்டிங்கில் கடைசி நேரத்தில் கணிசமான ரன்கள் அடிக்கக்கூடியவர். அவர் வளர்ந்து வரும் வீரர். ஆனால் நாங்கள் அவரிடம் சிறந்த திறனைக் காண்கிறோம். ஆஸ்திரேலியாவிலும் அவர் அற்புதமாக பந்து வீசினார். புதிய பந்தில் முக்கிய விக்கெட்டுகள் எடுப்பதையே அவரிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
குல்தீப் அனியில் நீண்ட காலமாக இருக்கிறார். அவர் அணிக்காக இந்த வேலையைத் தொடர்ந்து செய்கிறார். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அவர் எங்களுக்கு முக்கியம்” என்று கூறினார்.






