முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

image courtesy:ICC
சதமடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் டேரில் மிச்செல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கிறைஸ்ட்சர்ச்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 119 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரூதர்போர்ட் 55 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சதமடித்து அசத்திய டேரில் மிச்செல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.






