இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இது வெறும் டிரா அல்ல.. இந்திய அணியின்.. - கே.எல்.ராகுல் பேட்டி


இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இது வெறும் டிரா அல்ல.. இந்திய அணியின்.. - கே.எல்.ராகுல் பேட்டி
x

image courtesy:PTI

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்தது.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் இந்திய முன்னணி வீரரான கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், "இந்த வெற்றி எல்லாவற்றையும் குறிக்கிறது. நான் சிறிது காலம் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும் பார்த்திருக்கிறேன். உலகக்கோப்பையை உயர்த்துவதற்கு ஈடாக எதுவும் இல்லை.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் நிலைத்திருக்குமா இல்லையா என்பது குறித்து பல கேள்விகளும் சந்தேகங்களும் நிலவுகின்றன. அந்த கேள்விகளுக்கு இந்தத் தொடரில் இரு அணிகளும் விளையாடிய விதம் பதில் சொல்லியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தத் தொடரில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் போராடி 2-2 என தொடரை சமன் செய்தது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம்.

இது ஒரு டிராவாகத் தோன்றலாம், ஆனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும். இந்திய அணி இனி வெளிநாடுகளில் பல தொடர்களை வெல்லும். இந்த வெற்றிக்கு முழு அணியும் தகுதியானது" என்று கூறினார்.

1 More update

Next Story