இங்கிலாந்து தன்பாலின கிரிக்கெட் வீராங்கனைகள் தம்பதிக்கு ஆண் குழந்தை

Image Courtesy: Instagram - natsciver / X (Twitter) / File Image
இங்கிலாந்தின் தன்பாலின இணையான கிரிக்கெட் வீராங்கனைகள் நாட் ஸ்கைவர் - கேத்ரின் ஸ்கைவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
லண்டன்,
இங்கிலாந்தின் தன்பாலின இணையான கிரிக்கெட் வீராங்கனைகள் ஆல்-ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்டும், கேத்ரின் ஸ்கைவர் பிரண்டும் காதலித்து 2022-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இதில் நாட் ஸ்கைவர் மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் தொடர்நாயகியாக (523 ரன் மற்றும் 12 விக்கெட்) ஜொலித்தார். அதே சமயம் இங்கிலாந்து அணிக்காக ஒட்டுமொத்தத்தில் 335 விக்கெட் வீழ்த்தியவரான கேத்ரின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருவரில் 39 வயதான கேத்ரின் குழந்தை பெற்றுக் கொள்வது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி செயற்கை முறையில் கருத்தரிப்புக்கான சிகிச்சையை பெற்று அவர் கர்ப்பமானார். இந்த நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து பெற்றோரான மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு குழந்தைக்கு தியோடர் மைக்கேல் ஸ்கைவர் பிரண்ட் என்று பெயரிட்டு இருப்பதாக கூறியுள்ளனர். அவர்களுக்கு கிரிக்கெட் வீராங்கனைகளும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.