துலீப் கோப்பை கிரிக்கெட்: கிழக்கு மண்டல அணிக்கு முகமது ஷமி தேர்வு

15 பேர் கொண்ட கிழக்கு மண்டல அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது
மும்பை,
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி வரை நடக்கிறது. இதன் கால்இறுதி ஆட்டங்களில் வடக்கு- கிழக்கு, மத்திய- வடகிழக்கு மண்டல அணிகள் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன.
இந்த போட்டிக்கான மேற்கு மண்டல அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மும்பையை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர், சர்ப்ராஸ் கான் உள்பட 7 மும்பை வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மூத்த வீரர்களான சவுராஷ்டிராவின் புஜாரா, மும்பை பேட்ஸ்மேன் அஜிங்யா ரஹானேவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
15 பேர் கொண்ட கிழக்கு மண்டல அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும், துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயத்தால் சில மாதங்களாக எந்த போட்டியிலும் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் 34 வயதான முகமது ஷமி அணியில் இடம் பெற்றுள்ளார். ஆகாஷ் தீப், முகேஷ்குமார், ரியான் பராக்கும் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் பேட்ஸ்மேன் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி மாற்று வீரர்களின் பட்டியலில் உள்ளார்.