ஸ்ரேயாஸ் ஐயருடன் டேட்டிங் சென்றேனா..? வதந்திகளுக்கு மிருணாள் தாக்கூர் பதிலடி

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் தற்போது ஓய்வில் உள்ளார்.
மறுபுறம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாக்கூர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர்.
பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.
இந்த சூழலில் ஸ்ரேயாஸ் ஐயரும் மிருணாள் தாக்கூரும் ரகசியமாக டேட்டிங் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபகாலமாக இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளதாகவும் நண்பர்களின் பார்ட்டிகளில் மிருணாள் தாக்கூரும், ஸ்ரேயாஸ் ஐயரும் நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த தவறான தகவல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மிருணாள் தாக்கூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அவர்கள் பேசட்டும், நாம் சிரிப்போம். பின்குறிப்பு.: வதந்திகள் இலவச விளம்பரம்… எனக்கு இலவசம் என்றால் ரொம்ப பிடிக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.






