பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி: பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்த ஜாகீர் கான்

கோப்புப்படம்
பிட்ச் பராமரிப்பாளரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் விமர்சித்துள்ளார்
லக்னோ,
ஐ.பி.எல்.தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 69 ரன் எடுத்தார்.
இந்த நிலையில் , இந்த தோல்விக்கு பிட்ச் பராமரிப்பாளரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் விமர்சித்துள்ளார் ..இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இது எங்களது சொந்த மைதானத்தில் நடந்த போட்டி போலவே இல்லை. இது சொந்த மைதானம் என்று சொல்லும் நிலையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் சொந்த மைதானத்தில் சில சாதகங்களைப் பெறுகின்றன. ஆனால், இங்கு பிட்சை உருவாக்கிய ஊழியர் இது எங்களின் சொந்த மைதானம் என்பதைச் சிந்திக்காமல் செயல்பட்டது போல உள்ளது.பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது. இது குறித்து நாங்கள் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் முதல் மற்றும் கடைசி போட்டியாக இது இருக்கும் என நம்புகிறேன்.ஏனெனில், லக்னோ அணியின் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இங்கே வந்தார்கள். முதல் சொந்த மைதானப் போட்டி என்ற ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். என ஜாகீர் கான் கூறியுள்ளார்