கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி... ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் கூறியது என்ன..?

Image Courtesy: @IPL
இந்த போட்டியில் நாங்கள் பீல்டிங்கில் அதிக தவறுகள் செய்தோம் என ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 60 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 80 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமான க்ளாசென் 33 ரன் எடுத்தார்.
கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வைபவ் அரோராவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது எங்களுக்கு சிறந்த நேரம் இல்லை. இந்த இலக்கு எட்டக்கூடியதுதான், விக்கெட் மிக அருமையாக இருந்தது.
பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டதன் காரணாமக இறுதியில் தோல்வி கண்டோம். நாங்கள் எதார்த்தமாக இருக்க வேண்டும், தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் அது எங்களுக்குப் பலனளிக்கவில்லை. நாம் சிறந்த விருப்பங்களைத் தேர்ந்தெடுத்திருக்க முடியுமா என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும். எங்கள் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை தொடங்கும் போது சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இறுதியில் முடிவு வேறு மாதிரியாக இருக்கிறது. பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டோம் என நினைக்கிறேன். பவுலிங்கில் அவ்வளவு மோசமாக இல்லை.
நாங்கள் சில கேட்ச்களை பிடித்து தொடக்கத்திலேயே அவர்களை நிறுத்தியிருக்க வேண்டும். நாங்கள் 3 ஓவர்கள் மட்டுமே ஸ்பின்னர்களை பயன்படுத்தினோம். அதற்கான தேவை இல்லாததால் நாங்கள் இந்த முடிவை செய்தோம். அதனால் ஆடம் ஜாம்பா பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. இனி அடுத்ததாக எங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கு எங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.