காயத்தை சந்தித்த கிறிஸ் வோக்ஸ்... தொடர்ந்து விளையாடுவாரா..?


காயத்தை சந்தித்த கிறிஸ் வோக்ஸ்... தொடர்ந்து விளையாடுவாரா..?
x

Image Cortesy: FILE IMAGE / X (TWITTER)

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் 'டிரா' வில் முடிந்தது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் (2 ரன்) அட்கின்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.அடுத்து தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இறங்கினார். சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் (14 ரன், 40 பந்து, ஒரு பவுண்டரி) கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் போல்டானார்.

இந்தியா 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அதனால் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மழை கொட்டியதால் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது கேப்டன் சுப்மன் கில் (21 ரன், 35 பந்து, 4 பவுண்டரி) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். தொடர்ந்தது. சாய் சுதர்சன் 38 ரன்களில் (108 பந்து, 6 பவுண்டரி) விக்கெட் கீப்பர் ஜேமி சுமித்திடம் சிக்கினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா (9 ரன்), துருவ் ஜூரெல் (19 ரன்) நிலைக்கவில்லை.

57 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் (43 ரன்), வாஷிங்டன் சுந்தர் (8) ஆடிக் கொண்டிருந்தனர். எக்ஸ்டிரா வகையில் இந்தியாவுக்கு 16 வைடு உள்பட 30 ரன்கள் கிடைத்தது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன், ஜோஷ் டாங்கு தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்ந்து கருண் நாயர் , வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிலைத்து விளையாடினர் . சிறப்பாக விளையாடிய கருண் நாயர் அரைசதமடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது .கருண் நாயர் 52 ரன்களும் , வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தின் போது இங்கிலாந்து முன்னணி வீரரான கிறிஸ் வோக்ஸ் 57வது ஓவரில் கருண் நாயர் அடித்த பந்தை பவுண்டரிக்குச் செல்லாமல் தடுக்க டைவ் அடித்தார்.பந்தை தடுத்து நிறுத்திய போதிலும், அவர் இடது தோள்பட்டையில் மோசமாக காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரது கரம் அவரது ஸ்வெட்டரால் கட்டப்பட்டு, மருத்துவக் குழுவினரின் உதவியுடன் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கிறிஸ் வோக்ஸின் தோள்பட்டை மூட்டு விலகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடனடியாக அவருக்கு ஸ்கேன் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முடிவுகளைப் பொறுத்தே அவர் இந்தப் போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது தெரியவரும். இதன் காராணமாக அவர் இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

1 More update

Next Story