பந்தை பிடிக்கும்போது காயம் அடைந்த கிறிஸ் வோக்ஸ் .. பெருந்தன்மையை காட்டிய கருண் நாயர்

இங்கிலாந்து - இந்தியா 5-வது டெஸ்ட்டில் இந்த சம்பவம் நடந்தது.
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் 'டிரா' வில் முடிந்தது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் அடித்துள்ளது. கருண் நாயர் 52 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன், ஜோஷ் டாங்கு தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த சூழலில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் கருண் நாயர் அடித்த பந்து பவுண்டரி நோக்கி சென்றது. அதனை இங்கிலாந்து முன்னணி வீரர் கிறிஸ் வோக்ஸ் பவுண்டரிக்குச் செல்லாமல் தடுக்க டைவ் அடித்தார்.பந்தை தடுத்து நிறுத்திய போதிலும், டைவ் அடித்ததில் அவர் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார்.
அதற்குள் கருண் நாயர் 3 ரன் ஓடி முடித்து விட்டார். 4-வது ரன் ஓட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிறிஸ் வோக்ஸ் காயம் அடைந்ததை கண்ட கருண் 4-வது ரன் வேண்டாம் என பெருந்தன்மையாக மறுத்தார். அவரது செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.