சென்னை அணி 10-வது இடத்தை பிடிக்க வேண்டும்.. அப்போதுதான்.. - சேவாக்

நடப்பு தொடரில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு சீசனில் 9-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. இதனால் அந்த அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இருப்பினும் சென்னை அணி இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததில்லை. இந்த பெருமையையாவது தக்கவைத்து கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை அணி புள்ளி பட்டியலை கடைசி இடத்தை பிடிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். அப்போதுதான் சிஎஸ்கே அடுத்த சீசனில் தவறுகளை திருத்திக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சென்னை 10வது இடத்தை பிடிக்குமா இல்லையா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் 10-வது இடத்தைப் பிடிக்க வேண்டும். அப்போதுதான் கடைசி இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தோம்? என்பதை அவர்கள் உணர்வார்கள். அடுத்த சீசன்களில் தவறுகளை திருத்திக்கொள்வார்கள்" என்று கூறினார்.