ஸ்லெட்ஜிங் செய்த பென் டக்கெட்... அவுட்டாக்கி வித்தியாசமாக வழியனுப்பி வைத்த ஆகாஷ் தீப்.. வீடியோ வைரல்

பென் டக்கெட் 43 ரன்களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட்டும், ஜாக் கிராவ்லியும் அதிரடியில் மிரட்டினர். இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்ட இவர்கள் ரன்ரேட்டை 7-க்கு மேலாக கொண்டு சென்றனர். ஸ்கோர் 92-ஐ எட்டிய போது (12.5 ஓவர்) டக்கெட் (43 ரன், 38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் 'ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்' அடிக்க முயற்சித்தபோது துருவ் ஜூரெலிடம் சிக்கினார். அவுட் ஆனதும் டக்கெட்டின் தோள்மீது கைபோட்டு பேசியபடி வித்தியாசமாக ஆகாஷ் தீப் வழியனுப்பி வைத்தார். இது பேசு பொருளாகி உள்ளது.
இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பென் டக்கெட், ஆகாஷ் தீப்பை நோக்கி, 'உங்களால் என்னை இங்கே அவுட்டாக்க முடியாது' என்று கூறி ஸ்லெட்ஜிங் செய்தார். இதன் காரணமாகவே ஆகாஷ் தீப், டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றியதும் ஆக்ரோஷமாக கத்தியதுடன், இப்படி வழியனுப்பியும் வைத்தார்.
முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாதற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.