அயர்லாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: வங்காளதேசம் நிதான ஆட்டம்

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 11ம் தேதி நடந்த முதல் டெஸ்ட்டில் அயர்லாந்தை இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹசன் ஜாய் 34 ரன்களும், இஸ்லாம் 35 ரன்களும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய மொனிநுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் நஜுமுல் 8 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய முஸ்பிகூர் ரஹிம் , லிண்டன் தாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்படி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்துள்ளது. ரஹிம் 99 ரன்னிலும், தாஸ் 47 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.






