பாபர், பர்ஹான் அதிரடி.. ஜிம்பாப்வே அணிக்கு கடின இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

image courtesy:PTI
முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.
ராவல்பிண்டி,
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹிப்சாதா பர்ஹான் - சைம் அயூப் களமிறங்கினர். இவர்களில் சைம் அயூப் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து பர்ஹான் உடன் பாபர் அசாம் கை கோர்த்தார்.
இருவரும் அதிரடியாக அடி பாகிஸ்தான் அணிக்கு வலு சேர்த்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பர்ஹான் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே பாபர் அசாம் 74 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் பஹீம் அஷ்ரப் 3 ரன்களிலும், முகமது நவாஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இறுதி கட்டத்தில் பகர் ஜமான் (10 பந்துகளில் 27 ரன்கள்) அதிரடியாக ஆடி பாகிஸ்தான் அணி 190 ரன்களை கடக்க உதவினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் அடித்துள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே பேட்டிங் செய்ய உள்ளது.






