ஆசிய கோப்பை: பாக்.உடன் இந்திய அணி விளையாடுமா..? பி.சி.சி.ஐ. செயலாளர் பதில்

image courtesy:PTI
ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் வருகிற 14-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. இதன் காரணமாக இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இதனிடையே இந்த தொடரில் திட்டமிட்ட படி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது. ஏனெனில் அண்மையில் முடிவடைந்த லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்தது. பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது.
அதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருந்தது. பல இந்திய முன்னாள் வீரர்கள் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய விளையாட கூடாது என கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழலில் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடாது என்றும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
இருப்பினும் பல முன்னாள் வீரர்கள் இந்திய அணி பாகிஸ்தான் உடன் விளையாட கூடாது என தொடர்ந்து கூறி வருகின்றனர். இது இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வியை பலரது மத்தியில் மீண்டும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற கேள்விகளுக்கு தெளிவான பதிலை கொடுக்கும் விதமாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா சில கருத்துகளை கூறியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது, “பிசிசிஐ-யின் கருத்துப்படி, மத்திய அரசு உருவாக்கும் எந்தவொரு முடிவையும் நாம் பின்பற்ற வேண்டும். இந்திய நாட்டின் நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடப்பது எங்களுடைய பணி. தற்போது வரை இந்தியா பாகிஸ்தான் இடையே எந்த ஒரு இருதரப்பு தொடரிலும் விளையாடக்கூடாது என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் இரு தரப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட முடியாது.
ஆசிய கோப்பை என்பது ஆசிய கண்டத்து நாடுகளை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு போட்டியாகும். எனவே நாம் அங்கு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும். மேலும், ஐசிசி போட்டிகளிலும், இந்தியாவுடன் நட்புறவு இல்லாத நாடு இருந்தால் நாம் விளையாட வேண்டும். ஆனால், இருதரப்பு போட்டிகள் தொடர்பாக, இந்தியாவுடன் நட்புறவு இல்லாத நாடுகளுடன் நாம் விளையாடப் போவதில்லை” என்று கூறினார்.