ஆசிய கோப்பை: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை சந்திக்கிறது.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு 8 மணி) சந்திக்கிறது. பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதல் 14-ந்தேதி அரங்கேறுகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் பங்கேற்கிறது. இதையொட்டி வீரர்கள் அனைவரும் கடந்த 4-ந்தேதி தனித்தனி குழுவாக துபாய் புறப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் நேற்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.