ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமனை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த யுஏஇ

Image Courtesy: @ACCMedia1
யுஏஇ தரப்பில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் ஆடின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. யுஏஇ தரப்பில் அதிகபட்சமாக முகமது வசீம் 69 ரன்கள் எடுத்தார்.
ஓமன் தரப்பில் அதிகபட்சமாக ஜிதேன் ராமானந்தி 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட ஓமன் அணியினர் யுஏஇ வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் ஜதிந்தர் சிங் 20 ரன், ஆமிர் கலீம் 2 ரன், ஹம்மாத் மிர்சா 5 ரன், வாசிம் அலி 1 ரன், ஷா பைசல் 9 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ஆர்யன் பிஷ்ட் மற்றும் விநாயக் சுக்லா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்யன் பிஷ்ட் 24 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ஓமன் அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 42 ரன் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி யுஏஇ அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஓமன் தரப்பில் அதிகபட்சமாக ஆர்யன் பிஷ்ட் 24 ரன் எடுத்தார். யுஏஇ தரப்பில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.