ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வங்காளதேசம்


ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வங்காளதேசம்
x

image courtesy:twitter/@ACCMedia1

சூப்பர் ஓவரில் இந்திய அணி ரன் எதுவுமின்றி 2 விக்கெட்டுகளையும் இழந்தது.

தோகா,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகப்ட்சமாக சோகன் 65 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷி - பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வெறும் 3.4 ஓவர்களில் 53 ரன்கள் அடித்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சூர்யவன்ஷி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வதேரா (7 ரன்) நிலைக்கவில்லை.

இதனையடுத்து ஆர்யா உடன் கேப்டன் ஜிதேஷ் சர்மா கை கோர்த்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியை முன்னெடுத்து சென்றனர். இவர்களில் பிரியன்ஷ் ஆர்யா 44 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ரகிபுல் ஹசன் வீசினார். அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா 15 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

அதாவது இந்திய அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் அடித்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கு சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தரப்பில் ஜிதேஷ் - ரமன்தீப் சிங் களமிறங்கினர். முதல் பந்தை எதிர்கொண்ட ஜிதேஷ் சர்மா போல்டானார். அடுத்து வந்த அசுதோஷ் சர்மா 2-வது பந்தில் கேட்ச் ஆனார். இதன் மூலம் இந்திய அணி சூப்பர் ஓவரில் ஒரு ரன் அடிப்பதற்குள் 2 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து சூப்பர் ஓவரில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணியும் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இருப்பினும் 2-வது பந்தை சுயாஷ் சர்மா வைடாக வீசினார். இதனால் வங்காளதேச அணி திரில் வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

1 More update

Next Story