ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ரூட் அபார சதம்.. முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு


ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ரூட் அபார சதம்.. முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு
x

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஸ்டார்க் வீசிய இந்த போட்டியின் முதல் ஓவரின் கடைசி பந்தில் பென் டக்கெட் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஆலி போப்பையும் ஸ்டார்க் டக் அவுட்டில் வெளியேற்றினார்.

முதல் இன்னிங்சில் 5 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை ஜோ ரூட் - ஜாக் கிராலி ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். 3-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியை மைக்கேல் நெசர் பிரித்தார். அவரது பந்துவீச்சில் கிராலி 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹாரி புரூக் 31 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஜோ ரூட் நங்கூரம் பாய்ச்சியது போல் விளையாடினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்த அவர் சதமடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது முதல் டெஸ்ட் சதமாக இது பதிவானது.

பின்வரிசை வீரர்களில், வில் ஜாக்ஸ் (19 ரன்), கஸ் அட்கின்சன் (4 ரன்), பிரைடன் கார்ஸ் (0) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஸ்டார்க் அசத்தலாக பந்துவீசி இவர்களை காலி செய்தார். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடினார்.

இதன் மூலம் முதல் நாளில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்துள்ளது. ரூட் 135 ரன்களுடனும், ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரூட் - ஆர்ச்சர் ஜோடி 44 பந்துகளில் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story