நீங்க உங்க வீட்ல விளையாடுறீங்களா..? குல்தீப் யாதவை திட்டிய பண்ட்.. என்ன நடந்தது..?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்டில் இந்த சம்பவம் நடந்தது.
கவுகாத்தி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 151.1 ஓவர்களில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக செனுரன் முத்துசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-வது நாள் ஆட்டம் முன் கூட்டியே முடித்து கொள்ளப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால் 7 ரன்களுடனும், கே.எல். ராகுல் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 480 ரன்கள் பின்தங்கி உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இதனை பார்த்து கடுப்பான கேப்டன் ரிஷப் பண்ட் குல்தீப் யாதவை திட்டினார்.
டெஸ்ட் போட்டிகளில் நேரத்தை வீணடிக்க கூடாது என்பதற்காக ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் வீச 60 வினாடிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி இருக்கிறது. இந்த விதியின் படி இரண்டு முறை 60 வினாடிக்கு மேல் சென்றால் நடுவர்கள் எச்சரிக்கை கொடுப்பார்கள். மூன்றாவது முறையாக இதே தவறை செய்தால் எதிரணிக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்படும். இந்திய அணிக்கு ஏற்கனவே 2 முறை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 3-வது முறையும் இதே தவறு நடந்தால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 5 ரன் வழங்கப்படும். இதன் காரணமாகவே ரிஷப் பண்ட், குல்தீப் யாதவை திட்டினார். இது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
அதில் ரிஷப் பண்ட் குல்தீப் யாதவை நோக்கி, “நீங்க உங்க வீட்ல விளையாடுறீங்களா? சீக்கிரமா பந்தை வீசுங்க. ஏற்கனவே இரண்டு முறை நடுவர்கள் எச்சரிக்கை கொடுத்து விட்டார்கள் குல்தீப். இன்னும் 30 வினாடிகள்தான் இருக்கிறது. உங்களுக்கு ஒரு முழு ஓவர் தேவையா? நீங்க டெஸ்ட் கிரிக்கெட்டை ஜோக் ஆக்கிட்டிங்க” என்று திட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






