அசத்தல் பந்துவீச்சு.. தென் ஆப்பிரிக்க ஏ அணியை 132 ரன்களில் சுருட்டிய இந்தியா ஏ

image courtesy:PTI
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
ராஜ்கோட்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி இந்தியா ஏ-க்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் (21 ரன்கள்), ரிவால்டோ மூன்சாமி (33 ரன்கள்), டயான் பாரெஸ்டர் (22 ரன்கள்), டெலானோ போட்ஜீட்டர் (23 ரன்கள்) மற்றும் பிரெனலன் சுப்ராயென் (15 ரன்கள்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.
வெறும் 30.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க ஏ அணி 132 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் நிஷாந்த் சந்து 4 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா ஏ களமிறங்க உள்ளது.






