இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உதவி: அஜய் சிங் உறுதி

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது.
புதுடெல்லி,
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று குவித்தது. வீராங்கனைகள் மீனாட்சி ஹூடா, நிகாத் ஜரீன், பிரீத்தி பவார், ஜாய்ஸ்மின் லம்போரியா, அருந்ததி சவுத்ரி, நிபுர் ஷெரான், பர்வீன் ஹூடா, வீரர்கள் சச்சின் சிவாச், ஹிதேஷ் குலியா ஆகியோர் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டனர். உலகக் கோப்பையில் அசத்திய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங் பேசுகையில், ‘உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. நாம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டியது அவசியமானதாகும். நமது வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதை உறுதி செய்ய வேண்டும். அடுத்து வரும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டியில் நமது குத்துச்சண்டை வீரர்கள் பதக்கம் வெல்வதற்கு தேவையான எல்லா உதவிகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வீரர்களின் பயிற்சிக்கு சிறந்த பயிற்சியாளர்களை நியமிப்பது, ஒவ்வொரு எடைப்பிரிவிலும் பல குத்துச்சண்டை வீரர்களை வளர்த்தெடுப்பது, நாடு முழுவதும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு சில எடைப்பிரிவில் நமது வலிமையை அதிகரிப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றார்.






