அபிக்யான் குண்டு இரட்டை சதம்.. மலேசியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா - மலேசியா அணிகள் விளையாடி வருகின்றன.
துபாய்,
8 அணிகள் இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி, மலேசியா உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேப்டன் ஆயுஷ் மாத்ரே 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் அரைசதம் விளாசிய நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த விஹான் மல்ஹோத்ரா 7 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த அபிக்யான் குண்டு - வேதாந்த் திரிவேதி சிறப்பாக ஆடி அணிக்கு வலு சேர்த்தனர். இதில் திரிவேதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அபிக்யான் குண்டு மலேசியா பந்துவீச்சை சிதறடித்தார். நாலாபுறமும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய அபிக்யான் குண்டு இரட்டை சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த திரிவேதி 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 408 ரன்கள் குவித்தது. அபிக்யான் குண்டு 209 ரன்களுடனும், தீபேஷ் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மலேசியா தரப்பில் முகமது அக்ரம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 409 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மலேசியா அணி களமிறங்க உள்ளது.






