8 சிக்சர்கள், 11 பந்துகளில் அரை சதம்... கிரிக்கெட் வரலாற்றில் அடுக்கடுக்காக ஆகாஷ் சாதனை; வைரலான வீடியோ

வெய்னி ஒயிட்டின் 12 பந்துகளில் அரை சதம் என்ற சாதனையை ஆகாஷ் முறியடித்து உள்ளார்.
ஷில்லாங்,
குஜராத்தின் சூரத் நகரில் நடந்து வரும் ரஞ்சி கோப்பை போட்டிக்கான கிரிக்கெட் தொடரில் அருணாசல பிரதேசத்திற்கு எதிராக மேகாலயா மாநில கிரிக்கெட் வீரர் ஆகாஷ் குமார் சவுத்ரி (வயது 25) அடுக்கடுக்காக பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
8-வது வீரராக களமிறங்கிய அவர், முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்தடுத்து சிங்கிள்ஸ் ஓடி 2 ரன்களை சேர்த்திருக்கிறார். இதற்கு பின்னர் அவருடைய விஸ்வரூப ஆட்டம் வெளிப்பட்டது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான லிமர் தபி வீசிய 126-வது ஓவரின்போது தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அவர் பறக்க விட்டார்.
இதனால், முதல்தர கிரிக்கெட் போட்டியில் 6 சிக்சர்கள் அடித்த ரவி சாஸ்திரி, சர் கேரி சோபர்ஸ் ஆகியோரின் வரிசையில் 3-வது வீரராக ஆகாஷ் இணைந்துள்ளார். அத்துடன் அவர் நிற்கவில்லை. அடுத்த ஓவரின் 2 பந்துகளையும் அவர் சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் அடுத்தடுத்து 8 சிக்சர்களை அடித்து புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். 11 பந்துகளில் அவர் அரை சதம் விளாசினார். இது வரலாற்று சாதனையாகும்.
2012-ம் ஆண்டில் லீசெஸ்டர்ஷைரின் வீரர் வெய்னி ஒயிட்டின் 12 பந்துகளில் அரை சதம் என்பதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஆகாஷ் முறியடித்து உள்ளார்.
அதுவும் 9 நிமிடங்களில் அரை சதம் அடித்துள்ளார். இது விரைவாக அரை சதம் என்ற மற்றொரு சாதனையாகும். 1965-ம் ஆண்டு 13 பந்துகளில் கிளைவ் இன்மேன் அரை சதம் விளாசினார். 8 நிமிடங்களில் அரை சதம் அடித்தது சாதனையாக உள்ளது. அந்த வரிசையில் ஆகாஷ் 2-ம் இடம் பிடித்துள்ளார். ஆகாஷ் பந்துகளை சிக்சருக்கு பறக்கு விடும் வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது.






