5-வது டெஸ்ட்: டேல் ஸ்டெயினின் கணிப்பை நிஜமாக்கிய முகமது சிராஜ்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் (111ரன்கள்), ஜோ ரூட் (105 ரன்கள்) சதமடித்தனர் இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
இந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 4) வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முன்னிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.
முன்னதாக இந்த 5-வது டெஸ்டில் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கணித்திருந்தார். அவரது கணிப்பை முகமது சிராஜ் உண்மையாக்கியுள்ளார்.
இந்நிலையில் டேல் ஸ்டெயினுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள முகமது சிராஜ் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "நீங்கள் கேட்டீர்கள். நான் வழங்கிவிட்டேன். இது உங்களிடமிருந்து வந்தது மிகவும் பாராட்டத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.