5-வது டெஸ்ட்: 2-வது நாளில் தலையில் வெள்ளை பேண்ட் அணிந்து விளையாடிய இங்கிலாந்து வீரர்கள்.. காரணம் என்ன..?

image courtesy:ICC
இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. பென் டக்கெட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆலி போப் களமிறங்கினார். சிறப்பாக ஆடிய கிராவ்லி 64 ரன்களிலும், ஆலி போப் 22 ரன்களிலும் அவுட்டாகினார்.
தற்போது வரை இங்கிலாந்து அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட் 9 ரன்களுடனும், ஹாரி புரூக் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்றைய நாள் ஆட்டத்தில் (2-வது நாள்) இங்கிலாந்து வீரர்கள் தலையில் வெள்ளை பேண்டை அணிந்து களமிறங்கினர். இதற்கான காரணம் என்னவெனில், இங்கிலாந்து முன்னாள் வீரரான கிரகாம் தோர்பே கடந்த வருடம் (55 வயது) இயற்கை எய்தினார். 1993 - 2005 வரையிலான காலகட்டங்களில் இங்கிலாந்துக்காக அவர் 100 டெஸ்ட் 82 ஒருநாள் போட்டிகளில் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் பல வெற்றிகளில் பங்காற்றிய அவர் பெரும்பாலும் களத்திற்கு வரும்போது தலையில் ஹெட் பேண்ட் அணிவார். 1969 ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்த அவர் 2024 ஆகஸ்ட் 4ம் தேதி இயற்கை எய்தினார். அதனாலேயே அவருடைய பிறந்தநாளான இன்று இங்கிலாந்து அணியினர் தலையில் வெள்ளை பேண்ட் அணிந்து அவரை கவுரவித்தனர்.