3-வது டெஸ்ட்: இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை சுட்டிக்காட்டிய தினேஷ் கார்த்திக்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த வேளையில் அடுத்த 11 ரன்களை அடிப்பதற்குள் கடைசி 4 விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த திடீர் சரிவினால் இங்கிலாந்து அணியை விட முதல் இன்னிங்சில் நாம் அதிக ரன்களை குவிக்க முடியாமல் போனது.
அதேபோல் முதல் இன்னிங்சின்போது இங்கிலாந்து வீரர் ஜேமி சுமித் 5 ரன்களில் கொடுத்த கேட்சை கே.எல் ராகுல் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஜேமி சுமித் 51 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது அந்த அற்புதமான இன்னிங்ஸ் இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பிற்கும் முக்கிய காரணமாக மாறியது. போட்டியின் அந்த சூழலில் கே.எல் ராகுல் தவறவிட்ட கேட்ச் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும்" என கூறினார்.