2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு மெகா இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க அணியின் 2-வது இன்னிங்சில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டப்ஸ் 94 ரன்களில் போல்டானார்.
கவுகாத்தி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆனை தவிர்க்க 290 ரன்கள் தேவையாக இருந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. ரையான் ரிக்கல்டன் (13 ரன்), எய்டன் மார்கரம் (12 ரன்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 59 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. ரிக்கல்டன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே மார்க்ரம் 29 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த் பவுமா (3 ரன்) விரைவில் நடையை கட்டினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டப்ஸ் - டோனி டி சோர்சி கூட்டணி சிறப்பாக ஆடி அணிக்கு வலு சேர்த்தது. இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் முன்னிலையை வலுப்படுத்த உதவியது. சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. டி சோர்சி (49 ரன்கள்) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் தவறவிட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வியான் முல்டர் வந்தார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டப்ஸ் அரைசதம் அடித்தார். ஸ்டப்ஸ் - முல்டர் கூட்டணி அதிரடியாக விளையாடி முன்னிலையை 500 ரன்களை தாண்ட வைத்தது. சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்களில் போல்டானார். அவர் ஆட்டமிழந்ததும் தென் ஆப்பிரிக்க அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் முல்டர் 35 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 549 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.






